தினசரி 1 ஜிபி ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ, ஏர்டெல் - நடவடிக்கை எடுக்கிறதா TRAI?
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது ஜியோ, ஏர்டெல்-ன் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.