இந்தியா

காலரா தொற்றால் பாதிப்பு: ஜாம்பியாவுக்கு 2வது கட்டமாக உதவி பொருட்களை அனுப்பியது இந்தியா

Published On 2024-02-18 01:07 GMT   |   Update On 2024-02-18 01:07 GMT
  • காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும்.
  • கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

புதுடெல்லி:

ஜாம்பியா நாட்டில் காலரா வியாதி பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் லுசாகா மாகாணத்தில் தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.

ஜாம்பியாவில் காலரா பெருந்தொற்று பரவலால் 35 லட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளனர்.

அந்நாட்டில் மழைக்காலம் வரும் மே மாதம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிப்புகளும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், காலரா பரவலை அதிகரிக்கச் செய்யும். காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

இந்நிலையில், ஜாம்பியா நாட்டுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் எடையிலான உதவி பொருட்கள் இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதனை மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி உள்ளார்.

கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News