எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நாடு முழுவதும் பேரணி நடத்தப்படும்: மம்தா பானர்ஜி ஆவேசம்
- எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
- எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது என மம்தா பானர்ஜி சாடினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது எனவு அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், அவர்கள் என்னை காயப்படுத்தினால், என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பேன்.
நீ உண்மையான வாக்காளர் என்றால் பயப்படாதே. இப்போது நீ வங்காளதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாய் என்றும் எழுத வைப்பார்கள்.
பிறகு என்ன நடக்கும்? பயப்படாதே. நான் இங்கே இருக்கும்போது, உன்னை ஒதுக்கி வைக்க அனுமதிக்க மாட்டேன்.
இந்த நிலம் இந்த பா.ஜ.க.வுக்கு பயப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உன்னைத் தொட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல.
டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் மத்தியில் இருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.