இந்தியா

மாடி பஸ்களுக்கு பிரியா விடை கொடுத்த பயணிகள் - மும்பையில் நெகிழ்ச்சி

Published On 2023-09-16 04:23 IST   |   Update On 2023-09-16 04:23:00 IST
  • பெஸ்ட் மாடி பஸ் கடந்த 86 ஆண்டுகளாக நகர வீதிகளை அலங்கரித்து வந்தது.
  • பயணிகளின் இதயத்தை ஆட்கொண்ட மாடி பஸ் பிரியா விடை பெற்றது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்களின் மனம் கவர்ந்த பெஸ்ட் மாடி பஸ், கடந்த 86 ஆண்டுகளாக நகர வீதிகளை அலங்கரித்து வந்தது. மும்பை மக்கள் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மாடி பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள். மாடி பகுதியில் அமர்ந்தபடி நகரின் அழகை பயணிகள் கண்டு கழிப்பார்கள்.

இதற்கிடையே, நவீன காலத்திற்கு ஏற்ப ஏ.சி. மாடி பஸ்களை இயக்க பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்தது. அந்த வகையில் 200 ஏ.சி. மாடி பஸ்களை வாங்க முடிவு செய்து, அதில் 35 பஸ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை கடந்த பிப்ரவரி மாதம் சேவையை தொடங்கியது. இதனால் குளு குளு சூழலில் மக்கள் மாடி பஸ்களில் பயணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இதுநாள் வரை மக்களுக்கு சேவையாற்றிய ஏ.சி. அல்லாத மாடி பஸ்களை கனத்த இதயத்துடன் விடை கொடுக்க பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் பழைய மாடி பஸ்களுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது. அந்தேரி அகர்கர் சவுக்கில் மாலை 5.30 மணியளவில் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பெஸ்ட் குழும அதிகாரிகள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட மாடி பஸ்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதற்காக தேங்காய் சுற்றி பஸ்சுக்கு சிறப்பு பூஜையும் நடத்தினர்.

Tags:    

Similar News