இந்தியா

மாநில அரசு எப்படி பிளாக் செய்ய முடியும்: ஷம்பு எல்லையை திறக்க அரியானாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2024-07-12 15:06 IST   |   Update On 2024-07-12 15:06:00 IST
  • டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாத வகையில் எல்லையை பிளாக் செய்தது அரியானா.
  • போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருப்பதால் தடையை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு டிராக்டரில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அரியானா மாநில அரசு டெல்லி, பஞ்சாப், அரியானா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷம்பு எல்லையில் தடுப்புகளை அமைத்தது. கான்கிரீட் அமைத்தும், பெரிய பெரிய ஆணிகளை சாலைகளிலும் பதித்தும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முடியாத வகையில் சாலையை பிளாக் செய்தது. இதனால் விவசாயிகள் ஷம்பு எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தற்போதும் குறைந்த அளவிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த அரியானா மாநிலத்திற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அரியானா மாநிலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநில அரசு எப்படி தேசிய நெடுஞ்சாலையை பிளாக் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், "போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது மாநில அரசின் பணியாகும். எல்லயை திறந்து வையுங்கள். அதை கட்டுப்படுத்துங்கள் என நாங்கள் சொல்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

அத்துடன் அரியானா மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீங்கள் சாலை வழியாக பயணம் செய்வீர்கள் என நினைக்கிறேன் என நீதிபதி சூர்ய காந்த் கேட்டார். அப்போது வழக்கறிஞர் ஆமாம் என்றார்.

அப்போது நீதிபதி, "நீங்களும் சிரமங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News