இந்தியா

கோட்டயத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதையும், மீட்புப பணிகள் நடைபெறுவதையும் காணலாம்

பல மாவட்டங்களில் பலத்த மழை: கேரளாவில் 2 இடங்களில் நிலச்சரிவு

Published On 2023-09-22 04:56 GMT   |   Update On 2023-09-22 04:56 GMT
  • கோட்டயம் மாவட்டம் ஈரட்டுப்பேட்டையில் வாகமன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது.
  • கோட்டயம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அந்த மாவட்டங்களுக்கு ஏற்கனவே மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

பலத்த மழை காரணமாக திருச்சூர் மாவட்டம் வெள்ளணியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு சாலை முழுவதும் பாறாங்கற்கள் மற்றும் சேறு நிறைந்து காணப்பட்டது. மேலும் ஏராளமான பயிர்களும் மழைக்கு சேதமாகியிருக்கின்றன.

கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. அந்த மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பகுதிகளில் நேற்று பல மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கோட்டயம் மாவட்டம் ஈரட்டுப்பேட்டையில் வாகமன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ஈரட்டுப்பேட்டை-வாகமன் வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்குளம் பகுதியில் சிலரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. சத்தப்புழா பகுதியில் சில வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனைப்பிலவு பகுதியில் வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது.

வெள்ளயானியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மக்கள் வசிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பாறைகள் மற்றும் மண் குவியல் வீதியில் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது.

கோட்டயம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கோட்டயம் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News