இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம்

Published On 2025-04-27 10:26 IST   |   Update On 2025-04-27 10:26:00 IST
  • கருடா வட்டம் வரை பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றன.
  • நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் நேர ஒதுக்கீட்டு சர்வ தரிசன டிக்கெட் பெறுவதற்காக ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதைகளில் குவிந்தனர்.

அதிக அளவு பக்தர்கள் குவிந்ததால் தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

தற்போது திருப்பதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கைக்குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். திருப்பதியில் பக்தர்கள் காத்திருக்கும் 31 அறைகளும் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தற்போது திருப்பதி மலைக்கு வரும் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடியில் ஆக்டோபஸ் படையினர் மற்றும் போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளை கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கருடா வட்டம் வரை பக்தர்களின் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்றன.



இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் அலிபிரி நடைபாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை ஒன்று அப்பகுதியில் நடமாடுவதை கண்டனர். இதையடுத்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர். நடைபாதையில் செல்லும் பக்தர்கள் மிகுந்த விழிப்புடன் கும்பலாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 82,811 பேர் தரிசனம் செய்தனர். 34,913 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News