Full-ஆ சாப்பிட்டுவிட்டு Bill-ஐ செலுத்தாமல் நைசாக நழுவிய கும்பல் - டிராபிக்கில் மாட்டிக்கொண்டதால் சிக்கிய சம்பவம்
- போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது.
குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாட ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.
அவர்கள் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிற்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். தங்களுக்கு வேண்டிய உணவுகளை விரும்பியபடி ஆர்டர் செய்து இஷ்டம் போல சாப்பிட்டார்கள்.
சாப்பிட்ட உணவிற்கான பில்லை பணியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ரூ.10 ஆயிரத்து 900-த்திற்கான பில்லை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பணம் செலுத்தாமல் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தனர்.
கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக ஓட்டலிலிருந்து வெளியேறி காரில் தப்பி சென்றனர். அவர்கள் அங்கிருந்து செல்வதை கண்ட ஓட்டல் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அவர்கள் காரில் தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
ராஜஸ்தான் மாநில எல்லையான அம்பாஜியில் அந்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றது. அப்போது போலீசார் காரை சுற்றி வளைத்து அவர்கள் 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை வசூல் செய்தனர். அவர்களை கைது செய்து இதேபோல் வேறு எங்காவது மோசடி செய்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.