இந்தியா

நள்ளிரவு 2 மணி.. மருத்துவமனை விரைந்த தெலுங்கானா முன்னாள் முதல்வர்.. என்ன ஆச்சு தெரியுமா?

Published On 2023-12-08 09:22 IST   |   Update On 2023-12-08 12:26:00 IST
  • சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
  • ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதி.

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். வலியால் துடித்த அவரை குடும்த்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

69 வயதான சந்திரசேகர ராவ் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 


மருத்துவமனையில் உள்ள சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் கடந்த மூன்று நாட்களாக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலரை தனது இல்லத்தில் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். கடந்த 2014 முதல் 2023 வரை தெலுங்கானாவில் ஆட்சி செய்து வந்த கே சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியை காங்கிரஸ் வீழ்த்தியது.



இதையடுத்து காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று (டிசம்பர் 08) பதவியேற்றார். இவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்றது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரராவை பார்க்க கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News