எங்களுக்கு நாடு தான் முதலில்.. சிலருக்கு மோடி தான் முதலில்.. அட்டாக் செய்த கார்கே - சசி தரூர் ரிப்ளை!
- சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
- பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது.
பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூரை மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, "சசி தரூரின் மொழி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவர் காங்கிரஸ் காரியக் குழுவில் தக்கவைக்கப்பட்டுள்ளார். நாங்கள் நாட்டிற்காக ஒன்றாக நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரிலும் நாங்கள் ஒன்றாக நின்றோம். நாடு எங்களுக்குப் பெரியது.
நாடு முதலில் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மோடி பெரியவர். நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாக பிரதமரைப் புகழ்ந்து சசி தரூர் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். தி இந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமரிடம் இணையற்ற ஆற்றல் இருப்பதாகவும், அவர் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு சொத்து என்றும் குறிப்பிட்டார். சசி தரூரின் கட்டுரை பிரதமர் அலுவலகத்தால் பகிரப்பட்டது.
சசி தரூர் மோடியைப் புகழ்ந்தது அவர் பாஜகவுக்கு தாவுவதற்கான அறிகுறி என்று பல ஊகங்கள் இருந்தன. ஆனால் சசி தரூர் அதை நிராகரித்தார்.
கார்கேவின் கருத்துகளைத் தொடர்ந்து, தரூர் தனது எக்ஸ் பதிவில், ஒரு பறவையின் படத்தைப் பகிர்ந்து,"'பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இறக்கைகள் உங்களுடையது, வானம் யாருக்கும் சொந்தம் அல்ல" என்று குறிப்பிட்டுளார்.