இந்தியா

இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல்- மந்திரி அகமது தேவர்கோவில்

Published On 2023-06-02 04:56 GMT   |   Update On 2023-06-02 08:48 GMT
  • கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
  • விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு விமானங்கள் மூலமே வருகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவதற்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வெளிநாடு வாழ் கேரள மக்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர்.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் இக்கோரிக்கையை ஏற்று கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.

கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும்.

இதுவே விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால் கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிய முதல் மாநிலம் கேரளா என்ற பெருமையை பெறும்.

Tags:    

Similar News