இந்தியா

வருமான வரி தாக்கல் செய்வோர் விவரங்களை வழங்கிய மத்திய அரசு.. நிதி மந்திரியை சந்தித்து நன்றி தெரிவித்த பிடிஆர்

Published On 2023-08-01 12:43 GMT   |   Update On 2023-08-03 08:49 GMT
  • பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
  • முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் தமிழக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.

அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Tags:    

Similar News