விமானத்தை இயக்க விமானி மறுப்பு: விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்த ஏக்நாத் ஷிண்டே..!
- நிகழ்ச்சிகளை முடிவத்துவிட்டு இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
- பணி நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி, விமானி விமானத்தை இயக்க மறுப்பு.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கானில் இருந்து மும்பைக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது, தனது பணி நேரம் முடிவடைந்துவிட்டது எனக்கூறி விமானி விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததால் சுமார் ஒருமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று மதியம் 3.45 மணிக்கு ஜால்கான் வருவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் காலதாமதமாக வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முக்தைநகருக்கு சென்றார்.
ஏக்நாத் ஷிண்டு உடன் அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன் மற்றும் குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சில நிர்வாக அதிகாரிகள் உடன் சென்றனர்.
முக்தைநகரில் நடைபெற்ற பால்கி யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் சான்ட் முக்தை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு ஜல்கான் விமான நிலையம் வந்தடைந்தார்.
ஆனால், விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். தன்னுடைய பணி நேரம் முடிவடைந்து விட்டது. விமானத்தை இயக்க புதிய அனுமதி பெற வேண்டும். அதற்கு சற்று நேரம் தேவை எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஏக்நாத் ஷிண்டே விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே உடன் வந்தவர்கள், விமானியிடம் சுமார் 45 மணி நேரம் பேசி, அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இதற்கான அதிகாரிகளுடன் பேசி, அனுமதி பெற்றபின், விமானி விமானத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்தான் விமானி, விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் மகாஜன் கூறுகையில் "விமானியின் உடல்நலம் தொடர்பான கவலையும், நேரப் பிரச்சினையும் இருந்தது. சில தொழில்நுட்ப சிக்கல்களும் இருந்தன. நாங்கள் விமான நிறுவனத்திடம் பேசினோம், அவர்கள் நிலைமையை விமானிக்கு அவர்களின் வழியில் விளக்கினர். அது ஒரு சிறிய பிரச்சினை" என்றார்.