இந்தியா
ஜனாதிபதி திரவுபதி முர்மு 16-ந்தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகை
- மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.
- கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார்.
திருவனந்தபுரம் :
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 16-ந்தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார். அதன்படி 16-ந்தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு கொச்சி வருகிறார். அங்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஐ.என்.எஸ். துரோனாச்சார்யா போர்க்கப்பலில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து திருவனந்தபுரம் வரும் அவர் இரவு திருவனந்தபுரத்தில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள்(17-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் அமிர்தானந்தமயி மடத்துக்கு சென்று மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.
பின்னர் திருவனந்தபுரம் திரும்பும் அவர், மதியம் கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பிற்பகலில் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.