டி.ஜி.பி. நியமன விவகாரம்: தமிழக அரசு அனுப்பிய பெயர் பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றார்.
- பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:
மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், 'டி.ஜி.பி. நியமனம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி கூறிய தீர்ப்பில், டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.
யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. நியமனத்தில் ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது, இந்த மனு சற்று முன்னதாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. டி.ஜி.பி. நியமன நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததன் அடிப்படையில் மனு முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பிவைக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்தும் கடமையை செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளதால், தலைமைச் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யைநியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.