மாமியாரை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற பல் டாக்டர்: 19 இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்!
- துண்டிக்கப்பட்ட கை இருந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
- சொகுசு கார் செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 7-ந் தேதி காலையில் பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட ஒரு கையுடன் தெருநாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கையை மீட்டு விசாரணை நடத்தினர். ரத்தம் வடிந்த நிலையில் கை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. யாரையோ கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து துண்டிக்கப்பட்ட கை இருந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 19 இடங்களில் துண்டிக்கப்பட்ட உடலின் பல்வேறு பாகங்கள் மீட்கப்பட்டது. ஆனாலும் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அது பெண்ணின் உடல் பாகங்கள் என்று தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் துமகூரு மாவட்டத்தில் மாயமான பெண்கள் குறித்த பட்டியலை தயாரித்தனர். அப்போது கடந்த 3-ந்தேதி துமகூரு புறநகர் பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவி (42) என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் அவரது கணவர் பசவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 3-ந் தேதி தனது மனைவி ஹனுமந்தபுராவில் உள்ள தனது மகள் தேஜஸ்வியின் வீட்டிற்கு சென்றபோது மாயமானதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தேடினர். அப்போது கொரட்டகெரேவில் பெண்ணின் தலையை மீட்டனர். பின்னர் மாயமான லட்சுமி தேவியின் கணவர் பசவராஜை அழைத்து வந்து காட்டிய போது அது தனது மனைவியின் தலை என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் மாயமான லட்சுமி தேவி கொலை செய்யப்பட்டு உடல் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர் இந்த கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த 3-ந்தேதி மாலை துமகூரு அனுமந்தபுராவில் இருந்து ஒரு வெள்ளை நிற சொகுசு கார் செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த காரின் முன்பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும், பின் பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த காரின் உண்மையான எண்ணை கண்டுபிடித்தனர். அப்போது அது கொரட்டகெரே அருக உள்ள உர்டிகெரே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது செல்போன் எண்ணை கைப்பற்றி அழைப்புகளை கண்காணித்தனர். அப்போது லட்சுமிதேவி காணாமல் போன அன்று மதியம் முதல் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் கேட்ட போது கடந்த 3, 4-ந் தேதிகளில் சதீஷ் தோட்டத்தில் வெள்ளை நிற சொகுசு கார் நின்றதாக தெரிவித்தனர்.
எனவே போலீசார் சதீஷ் மற்றும் அவரது கூட்டாளி கிரண் ஆகியோரை பிடித்து விசாரணைக்காக துமகூருக்கு அழைத்து சென்றனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட லட்சுமி தேவியின் மருமகன் ராமசந்திரய்யா. பல் டாக்டரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சொகுசு காரை வாங்கி அதை சதீஷின் பெயரில் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சதீஷ், கிரண் ஆகியோரை பார்த்ததும் ராமசந்திரய்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் லட்சுமி தேவியை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் பல் டாக்டர் ராமச்சந்திய்யாவிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு 40 வயது ஆகிறது. எனக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்த நிலையில் 2-வதாக லட்சுமி தேவியின் 20 வயதான மகள் தேஜஸ்வியை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம். இதை அடிக்கடி கூறி எனது மாமியார் லட்சுமி தேவி குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி வந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் ஒரு காரை வாங்கி அதை சதீஷ் பெயரில் பதிவு செய்தேன். சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வந்த மாமியார் லட்சுமி தேவியை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சதீஷ், கிரண் ஆகியோருக்கு ரூ.4 லட்சம் பணம் தருவதாக தெரிவித்தேன். முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்தேன்.
அதன்படி எனது மாமியார் வீட்டிற்கு வரும் தகவல் தெரிந்து அவரை வழிமறித்து காரில் ஏற்றி அழைத்து சென்றோம். காரில் செல்லும்போதே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் சதீசின் விவசாய தோட்டத்திற்கு கொண்டு சென்று கூர்மையான கருவிகளை பயன்படுத்தி அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசினோம் என்று தெரியவித்தார். இதையடுத்து போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யா உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.