அரசியலமைப்பு அறிவு, வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளிலிருந்து பிறந்தது - சி.பி.ராதாகிருஷ்ணன்
- தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது.
- ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் தனது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். அவர் பேசியதாவது:-
தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது. நமது அரசியலமைப்பு அரசியலமைப்பு சபையில் நமது அன்னை பாரதத்தின் சிறந்த தலைவர்களால் வரைவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்திற்காகப் போராடிய மில்லியன் கணக்கான நமது நாட்டு மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.
சிறந்த அறிஞர்கள், வரைவுக் குழு மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நுண்ணறிவு மிக்க சிந்தனைகளை வழங்கினர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு பாரதத்தை இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாற்றியது. நமது அரசியலமைப்பு அறிவு மற்றும் வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து பிறந்தது. நமது அரசியலமைப்பின் ஆன்மா பாரதம் ஒன்று, அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களின் போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல்களில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்களிப்பு, நமது தாய் பாரத ஜனநாயகத்தின் கிரீடத்தில் மற்றொரு விலைமதிப்பற்ற வைரத்தைச் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை என்றார்.