இந்தியா

தற்கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டிய மனைவி- கணவருக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிமன்றம்

Published On 2025-11-20 07:47 IST   |   Update On 2025-11-20 07:47:00 IST
  • தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
  • வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.

மும்பை:

குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நலக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.

இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை.

மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்நல கோர்ட்டு அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News