இந்தியா

"தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு பினராயி விஜயன் எதிர்ப்பு

Published On 2024-04-05 05:21 GMT   |   Update On 2024-04-05 06:12 GMT
  • 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது.
  • 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருவனந்தபுரம்:

'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் இன்று (5-ந்தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்தன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News