இந்தியா

நான் ஜெயிலில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

Published On 2023-10-24 14:56 IST   |   Update On 2023-10-24 14:56:00 IST
  • எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது.
  • நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.

திருப்பதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

நான் ஜெயிலில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன். எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது. நான் இப்போது மக்களிடையே இல்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் எல்லா இடங்களிலும் என் பெயர் உள்ளது. நான் எப்போதுமே மக்களுக்காக உழைத்து வந்துள்ளேன்.

எனது முதல் கவனம் தெலுங்கு மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை நோக்கி தான் இருக்கிறது. நான் மாநிலத்தில் இல்லாதபோது மனைவி புவனேஸ்வரி என் சார்பில் செயல்படுவார். அவர் மக்களோடு தொடர்பில் இருப்பார்.

நான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது பொறுத்துக்கொள்ள முடியாமல் இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அவர் வருவார். இந்த அராஜக ஆட்சியை அவர் முழுமையாக அம்பலப்படுத்துவார்.

சட்டம் இருக்கிறது. கால அவகாசம் எடுத்தாலும் நான் மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் உழைக்க புதிய வீரியத்துடன் வெளியே வருவேன். நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜெயிலில் இருந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதற்கு அனுமதி இல்லை என்று ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்:-

சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தை தெலுங்கு தேசம் வெளியிட்டுள்ளது. ஜெயிலில் அவருக்கு பேனாவும், பேப்பரும் எப்படி கிடைத்தது? இந்த கடிதம் போலியானது.

சந்திரபாபு நாயுடுவின் ஊழலால் தான் மக்கள் சோர்ந்து போய் அவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கினர் என கூறப்பட்டுள்ளது.

தன்னை ஜெயிலில் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் இந்த கடிதத்தை கொடுத்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News