இந்தியா

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், டுவிட்டரில் வெளியிடத் தடை

Published On 2023-01-21 12:26 GMT   |   Update On 2023-01-21 12:26 GMT
  • டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ட்வீட்களை டுவிட்டர் நீக்கியது.
  • காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இந்த ஆவணப்படம் காட்டுவதாக மத்திய அரசு கண்டனம்

புதுடெல்லி:

பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை டுவிட்டர் மற்றும் யூடியூபில் வெளியிட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆவணப்படத்தை யாரேனும் மீண்டும் பதிவேற்றினாலோ அல்லது ட்வீட் செய்தாலோ அதன் புதிய லிங்க்குகளை நீக்குமாறு யூடியூப் மற்றும் ட்விட்டரிடம் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்களின் ட்வீட்களை டுவிட்டர் நீக்கியது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள பிரையன், 'பிபிசி ஆவணப்படத்தின் எனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியுள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. ஒரு மணி நேர பிபிசி ஆவணப்படம், சிறுபான்மையினரை பிரதமர் எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது' என கூறியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி எந்த தவறும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News