இந்தியா

திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலுக்கு சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரால் பரபரப்பு

Published On 2022-08-04 07:04 GMT   |   Update On 2022-08-04 07:04 GMT
  • தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி அலிபிரி சோதனை சாவடிக்கு வந்தது.
  • அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன் மூலம் வருகின்றனர்.

தரிசனத்திற்கு வரும் வாகனங்களில் மாற்று மதத்தினர் சின்னம் பொருத்திய வாகனங்கள் திருமலைக்கு செல்ல அனுமதி இல்லை. இதற்காக அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி அலிபிரி சோதனை சாவடிக்கு வந்தது.

அங்கிருந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் காரை முழுமையாக சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுமதித்தனர்.

அந்த கார் திருமலையில் உள்ள எஸ்.எம்.சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனைக்கண்ட தேவஸ்தான அதிகாரிகள் கார் உரிமையாளரை அழைத்து காரில் ஒட்டப்பட்டு இருந்த சிலுவை ஸ்டிக்கரை அகற்றினர். மேலும் மாற்று மதத்தினரின் சின்னங்களை ஒட்டிய வாகனங்களுக்கு திருமலையில் அனுமதி இல்லை. இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலுவை ஸ்டிக்கர் ஒட்டி திருமலைக்கு வந்த காரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News