இந்தியா

அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 8வது ஊதியக் குழு உறுப்பினர்களை நியமித்த அமைச்சரவை

Published On 2025-10-28 16:35 IST   |   Update On 2025-10-28 16:35:00 IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது.
  • 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

புதுடெல்லி:

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேம்படுத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்க ஜனவரி 16, 2025 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்புதலின்படி, ஊதியக் குழு தலைவர், உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள், ஓய்வூதியங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.

இந்நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

8வது ஊதியக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8வது ஊதியக் குழு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டார்.

பகுதிநேர உறுப்பினராக ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு (JCM) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு ஊதியக் குழுவின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.

இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

Tags:    

Similar News