இந்தியா

அம்மாவை பார்க்கணும்... மம்தா பானர்ஜிக்கு உருக்கமாக கடிதம் எழுதிய 5 வயது சிறுவன்

Published On 2025-09-09 10:59 IST   |   Update On 2025-09-09 10:59:00 IST
  • நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
  • நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.

அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.

இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.

அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-

முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார். 

Tags:    

Similar News