இந்தியா

பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: 243 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜ.க. கூட்டணி அதிரடி வியூகம்

Published On 2025-06-24 10:31 IST   |   Update On 2025-06-24 10:31:00 IST
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

பீகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

பீகாரில் பா.ஜ.க., ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 225 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் அடிநிலை தொண்டர்களின் கூட்டுக்கூட்டத்தை 243 தொகுதிகளிலும் கூட்ட தேசிய ஜனநாயக கூட்டணி முடிவெடுத்துள்ளது.

வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை தொகுதி வாரியாக தொண்டர்களை சந்தித்து மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றிப் பெறுவதையே நோக்கமாக கொண்டு கூட்டணியில் கட்சி பேதமின்றி அனைத்துத் தொண்டர்களும் உழைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குச் சாவடிகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தொண்டர்களுக்கு 2 மாத சிறப்பு பிரசாரத்தை தொடங்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News