இந்தியா

டெல்லி போராட்டம் - விவசாயி மாரடைப்பால் மரணம்

Published On 2024-02-16 09:44 GMT   |   Update On 2024-02-16 11:11 GMT
  • போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
  • இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

புதுடெல்லி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News