இந்தியா

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: போலீஸ் கட்டுப்பாட்டில் சபரிமலை

Update: 2022-12-06 04:23 GMT
  • சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
  • டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

திருவனந்தபுரம்:

இன்று (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தி கோவிலை சுற்றி கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சபரிமலை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு பி.விஷ்ணு ராஜ் ஆய்வு செய்தார். அவர் சன்னிதானம், பம்பை மற்றும் மரக்கூட்டம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அவரின் உத்தரவின் பேரில் சன்னிதானம் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாயிக் தலைமையில் கமாண்டோ படை, கேரள போலீஸ், அதி விரைவு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய படையினர் சன்னிதானம் நடை பந்தல் முதல் மரக்கூட்டம் வரை அணிவகுப்பு நடத்தினர்.

அதே சமயம் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

பம்பை கணபதி கோவில் முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் வெடிகுண்டை கண்டறியும் (மெட்டல் டிடெக்டர்) கருவி அமைத்து பக்தர்கள் சோதனை நடத்தப்பட்டு, சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும் படியாக செல்வோரை கண்காணிக்க பம்பை முதல் சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போல் வான் வழியாக கண்காணிக்க இந்த ஆண்டு பறக்கும் கண்காணிப்பு கேமரா ஈடுபடுத்தப்படுகிறது.

இதேபோல் வனத்துறை சார்பிலும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்தும் சோதனை நடந்து வருகிறது.

சபரிமலை சீசன் காலங்களில் வழக்கமாக வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நடப்பு சீசனையொட்டி நேற்று அதிகபட்சமாக 89 ஆயிரத்து 737 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.

டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News