இந்தியா

அயோத்தி நேரடி ஒளிபரப்பு வழக்கு: "தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி"-டிஜிபி

Published On 2024-01-29 17:32 IST   |   Update On 2024-01-29 17:32:00 IST
  • அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது.
  • கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழக கோயில் வளாகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவும், இந்து அமைப்புகளும் முயற்சி செய்தது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என அன்றைய தினம் உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பதில் மனு அளித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன.

கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News