20 பேர் உயிரிழந்த பஸ் விபத்துக்கு யார் காரணம்? - உயிர் தப்பிய பயணிகள் பகீர் தகவல்
- விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது.
- பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
பயணிகள் ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் இதமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருக்கும் அந்த நேரத்தில் அது அவர்களின் கடைசி தூக்கம் என்று தெரியாது.
பஸ்சில் பலியான 19 பேரின் முழு வாழ்க்கையும், கொளுந்துவிட்டு எரிந்த தீயில் எரிந்து சாம்பலாகி விட்டது.
இந்த விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப்கள் வெடித்து சிதறியது.
விபத்து குறித்து உயிர் தப்பிய பயணிகள் கூறியதாவது:-
விபத்து ஏற்பட்டதும் பஸ் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
எங்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் கை, கால்களை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பித்தோம்.
பின் பகுதியில் பயணித்த பயணிகள் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்து குதித்து உயிர் தப்பினர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர்கள் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து முன்பக்க கதவை திறந்து விட்டிருந்தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது. இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு டிரைவர்களின் அலட்சியமே காரணம். அவர்கள் முன் பக்க கதவை திறந்து விடவில்லை. பயணிகளை எச்சரிக்காமல் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிர் தப்பிய அஷ்வின் என்பவர் கூறுகையில்:-
நான் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். தீ விபத்து ஏற்பட்டதும் கண் விழித்தேன். டிரைவர் ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். மேலும் கீழே குதித்து மணலை அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றதை கண்டேன்.
ஆனால் அவர்கள் முழுமையாக முயற்சி செய்யாமல் ஓடிவிட்டனர். நான் பஸ் ஜன்னல் வழியாக குதித்து தப்பினேன் என்றார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை ஓட்டி வந்தவர் பல்நாடு மாவட்டம் ஒப்பி செர்லாவை சேர்ந்த டிரைவர் லட்சுமய்யா என தெரியவந்தது.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆனால் லட்சுமய்யா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு 10-ம் வகுப்பு தோல்வி அடைந்ததாக போலி சான்றிதழ் கொடுத்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றது தெரியவந்துள்ளது.
பஸ்சில் தீ அணைக்கும் கருவி, ஜன்னல்களை உடைக்கும் சிறிய சுத்தியல் போன்றவை இல்லை. இதனால் உயிர் பலியை தடுக்க முடியவில்லை. விதிமீறியதாக ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பஸ்சில் இருந்த பயணிகளில் 18 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் லக்கேஜ் கேரியரில் ஒரு பயணி இறந்து கிடந்தார். அவர் எப்படி லக்கேஜ் கேரியருக்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற பயணி ஒருவரின் உடல் ஜன்னலுக்கு வெளியே பாதியும் உள்ளே பாதியும் கருகிய படி கிடந்தார். இது விபத்தின் தீவிரத்தை காட்டியது.
இறந்தவர்களில் 18 பேரின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முன்பதிவு செய்யாமல் பயணித்த ஒரு பயணியின் அடையாளம் தெரியாமல் உள்ளது.
மேலும் பஸ் விபத்தில் பலியானவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மதகிரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 32) இவர் சங்கா ரெட்டி பகுதியில் சிப்ஸ் தின்பண்டங்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் அவர் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு வந்துள்ளார்.
மேலும் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22 )என்பது தெரிய வந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.