இந்தியா

சிறையில் இருந்தபடி முதல் உத்தரவை பிறப்பித்த முதல்-மந்திரி கெஜ்ரிவால்

Published On 2024-03-24 09:09 GMT   |   Update On 2024-03-24 09:09 GMT
  • டெல்லியில் 2 கோடி மக்களின் குடும்ப உறுப்பினராக அவர் தன்னை கருதுகிறார்.
  • அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுடெல்லி:

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியது.

தான் சிறையில் இருந்தபடியே ஆட்சி நடத்துவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அதன்படி இன்று அவர் சிறையில் இருந்தவாறு தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவு நீர்த்துறை தொடர்பானதாகும். அந்த துறை மந்திரியான அதிஷிக்கு குறிப்பு மூலம் இந்த உத்தரவை அனுப்பினார்.

இதுகுறித்து மந்திரி அதிஷி நிருபர்களிடம் கூறும்போது, "எனக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் மற்றும் வழிகாட்டுதலை அனுப்பியுள்ளார். அதை படித்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. டெல்லி மக்களின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகளை தீர்க்க உத்தரவிட்டிருந்தார்.

அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் மற்றும் சாக்கடை பிரச்சனைகளை எதிர்கொள்வதை நான் அறிந்தேன். இதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நான் சிறையில் இருப்பதால் மக்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கக்கூடாது. கோடை காலம் வந்து விட்டது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் போதுமான டேங்கர்களை வழங்கவும். மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு வழிகாட்டுங்கள். மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் லெப்டினன்ட் கவர்னரின் உதவியை நாடவும். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார் என்று கூறியுள்ளார்.

சிறையில் இருக்கும் அவர் மக்கள் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டிருக்கிறார். டெல்லியில் 2 கோடி மக்களின் குடும்ப உறுப்பினராக அவர் தன்னை கருதுகிறார்.

அவரை சிறையில் அடைக்கலாம். ஆனால் டெல்லி மக்கள் மீதான அவரது அன்பையும், கடமை உணர்வையும் நீங்கள் (பா.ஜனதா) சிறையில் அடைக்க முடியாது என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடந்தது.

டெல்லியில் உள்ள ஷாக்திபூங்காவில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு ஆம்ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பூங்காவிற்கு செல்லும் சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போல் மத்திய டெல்லியில் சில பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஐ.டி.ஐ. புட்ஓவர் பாலம் அருகே ஆம்ஆத்மி கட்சியினர் சிலர் பெரிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

Tags:    

Similar News