இந்தியா

நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்

Published On 2025-07-18 09:35 IST   |   Update On 2025-07-18 09:35:00 IST
  • இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.
  • அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பனிமலைகள் சூழ்ந்த காஷ்மீர் அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க கடும் சிரமத்துக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி வரை 38 நாட்கள் யாத்திரை நடைபெற இருக்கிறது. பால்டால் பாதை, பஹல்காம் பாதை வழியாக பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர்.

இதுவரை 2½ லட்சம் பக்தர்கள் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்து உள்ளனர்.

காஷ்மீரின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பால்டால் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் பக்தர் உயிரிழந்தார்.

காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்ததை தொடர்ந்து அடிப்படை முகாம்களில் இருந்து பஹல்காம், பால்டால் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நேற்று ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் 7908 யாத்ரீகர்களைக் கொண்ட 16வது குழு, கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஜம்முவிலிருந்து அதிகாலையில் புறப்பட்டனர்.

Tags:    

Similar News