காற்று மாசுபாடு...டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: விமானங்கள் தாமதம்
- மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
- டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
நேற்றிரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்தது. இந்நிலை யில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 481 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே கிராப் திட்டத்தின் 1, 2, 3 நிலை கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 4-வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் டெல்லியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் அரசின் உத்தரவுப்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.
புதிய கட்டுப்பாடுகளின் படி அனைத்து வகையிலும் அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடர்ந்த பனி மூட்டம் காரணமாக விமான செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகையில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு விமான அட்ட வணையை அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.