இந்தியா

அகமதாபாத் நகரில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படும்- கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

Published On 2023-01-26 04:11 GMT   |   Update On 2023-01-26 04:11 GMT
  • கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது.
  • போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது.

அதில், குடியரசு தினத்தன்று (இன்று) அகமதாபாத் ரெயில் நிலையம் மற்றும் கீதா மந்திர் பஸ் நிலையம், பலியதேவ் கோவில் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்படும். உங்களால் முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள் என கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போன் 'சுவிட்ச்ஆப்' ஆகி இருந்தது.

எனினும் அந்த நம்பரில் இருந்து கடைசியாக பேசிய இடத்தை கண்டுபிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

உடனடியாக அகமதாபாத் போலீசார், உத்தரபிரதேச போலீசாரை தொடர்பு கொண்டு பேசி, மிரட்டல் கடிதம் எழுதிய பஸ்வானை பிடித்தனர்.

விசாரணையில், மன நலம் பாதிக்கப்பட்ட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News