இந்தியா

பெண் யூடியூபரை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேச தொழில் அதிபர் கைது

Published On 2025-05-19 10:20 IST   |   Update On 2025-05-19 10:20:00 IST
  • ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
  • தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜாத்.

தொழிலதிபரான இவர் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த நிலையில், அங்கிருந்து சட்ட விரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.

இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுபார்த்து வருவதாக உத்தரபிரதேச காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார் ஷாஜாத்தை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் அவரை நேற்று மொராதாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.

மேலும் ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்க்க ஆட்களை சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News