இந்தியா

ஹரித்துவார் அம்மன் கோவிலில் கூட்ட நெரிசல்- 6 பக்தர்கள் உயிரிழப்பு

Published On 2025-07-27 11:59 IST   |   Update On 2025-07-27 11:59:00 IST
  • 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.
  • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் புகழ் பெற்ற மாதா மன்சா தேவி அம்மன் ஆலயம் உள்ளது. இது வடஇந்தியாவில் உள்ள மிக முக்கியமான 7 அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும்.

நவராத்திரி நாட்களில் இந்த ஆலயத்தில் லட்சக்கணக்கான பெண்கள் வந்து வழிபடுவது உண்டு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது ஆடி மாதம் என்பதால் மாதா மன்சா தேவி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஆலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

அப்போது கூட்டத்தில் ஒரு பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த திடீர் குழப்பத்தால் நிலைகுலைந்த பக்தர்கள் குழப்பத்தில் தவிப்புக்குள்ளானதால் அந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் இருந்து வெளியேறி பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ஓடினார்கள். இதனால் ஏராளமான பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்ற பக்தர்கள் ஓடினார்கள்.

கடும் நெரிசல், கூச்சல் காரணமாக சில பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மீதும் மற்ற பக்தர்கள் மிதித்தபடி ஓடினார்கள். இதனால் 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் கோவில் வளாகத்துக்கு விரைந்து சென்றனர். பக்தர்களை அமைதிப்படுத்தி நெரிசலை சீர்படுத்தினார்கள்.

அதன் பிறகு 6 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த பக்தர்களும் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாதா மன்சா தேவி அம்மன் கோவிலில் திடீர் நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பது நீண்ட நேரம் தெரியாமல் இருந்தது. தீவிர விசாரணையில் பக்தர் ஒருவர் மீது அந்த பகுதியில் இருந்த மின் கம்பி பட்டு அந்த நபர் அலறி உள்ளார்.

மின்சாரம் தாக்குவதாக பக்தர்கள் அலறவே மற்ற பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி இருக்கிறார்கள். இதனால்தான் பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News