56 இன்ச் மார்பு.. ஆனால் டிரம்பை கண்டு பயம்.. அம்பானி, அதானி ரிமோட் கண்ட்ரோலில் மோடி - ராகுல் கேலி
- 56 அங்குல மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார்.
- மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார்.
பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று பேகுசராய் மற்றும் ககாரியா பகுதியில் பேரணி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் பேசிய அவர், "பெரிய மார்பு இருப்பதால் மட்டும் நீங்கள் வலிமையானவராகிவிட மாட்டீர்கள். மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார், அந்தக் காலத்தின் வல்லரசான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்.
ஆனால் 56 இன்ச் மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார். பின்னர், பாகிஸ்தானுடனான இராணுவ மோதல் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.
மோடி டிரம்பிற்கு பயப்படுவது மட்டுமல்லாமல், அம்பானி மற்றும் அதானி ஆகியோரால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அமெரிக்கா அச்சுறுத்தியபோது, அவர் பயப்படவில்லை, சரியானதை செய்தார்.
ஆனால் டிரம்ப் மோடியிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொன்னபோது, மோடி அதை நிறுத்தினார்" என்று விமர்சித்தார்.
மேலும் மோடி அரசின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் சிறு வணிகங்களை அழித்து பெரிய வணிகர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.