இந்தியா

57 மணி நேர போராட்டம் வீண்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Published On 2024-12-12 08:24 IST   |   Update On 2024-12-12 08:24:00 IST
  • கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.

ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த கலிகாட் என்ற கிராமத்தில் கடந்த 9-ந்தேதி (திங்கள் கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஆர்யனை மீட்பது தொடர்பாk அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணிகளை தொடங்கினர். சிறுவனை மீட்க அதிக நேரம் ஆகலாம் என்பதால், முதலில் 150 அடி ஆழத்தில் இருந்த சிறுவன் சுவாசிக்க ஏதுவாக ஆக்ஜிஜன் குழாயை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்க கேமராக்களை இறக்கினர்.

சிறுவனை கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டே கிணற்றில் துளையிடும் எந்திரங்களை பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்க கிட்டத்தட்ட 55 மணி நேரங்கள் ஆகிவிட்டது. மீட்கப்பட்ட போது சிறுவன் சுயநினைவில் இல்லாமல் காணப்பட்டான்.

சிறுவனை மீட்டதும் அதிநவீன வசதிகள் நிறைந்த ஆம்புலன்ஸ் மூலம் அதிவேகமாக மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி சிறுவன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News