இந்தியா

மரம் கடத்தல்.. போலீஸ் துப்பாக்கி சூடு: அசாம்-மேகாலயா எல்லையில் 4 பேர் உயிரிழப்பு

Published On 2022-11-22 13:22 IST   |   Update On 2022-11-22 13:22:00 IST
  • மேகாலய பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் ஆயுதங்களுடன் குவிந்தனர்
  • கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தியதால் மோதல்

கவுகாத்தி:

அசாமில் இருந்து மேகாலயா நோக்கி இன்று அதிகாலையில் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை மேகாலயா எல்லையில் அசாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி டிரைவர் வேகமாக லாரியை ஓட்டி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் லாரி டயர் பஞ்சர் ஆகி நின்றுவிட்டது. டிரைவர் உள்ளிட்ட 3 பேரை அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த லாரியில் மரங்களை கடத்தியது தெரியவந்தது.

இதுபற்றி அருகில் உள்ள ஜிரிகெண்டிங் காவல் நிலையத்திற்கு வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து, போலீஸ் படையை அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். போலீசார் அங்கு சென்றபோது மேகாலய பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் ஆயுதங்களுடன் அந்த இடத்தில் குவிந்திருந்தனர்.

வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை சூழ்ந்துகொண்ட அவர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் வன காப்பாளர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News