இந்தியா

மக்களவையில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்

Published On 2023-09-19 09:08 GMT   |   Update On 2023-09-19 09:19 GMT
  • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்தது.
  • மசோதா ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் 3 பொது தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருந்தது.

2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி அந்த இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அது சட்டமாக முடியாமல் போனது.

அதன் பிறகும் பல தடவை மக்களவையில் அந்த மசோதாவை நிறை வேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால் சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற இயலவில்லை.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி சாதனை படைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருந்தது.

நேற்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்தது.

பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.

மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.

மேலும், மசோதாவுக்கு 'நாரி சக்தி வந்தன்' என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மசோதா அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலைப்பு சட்டம் திருத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News