இந்தியா

விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

Published On 2024-02-16 01:34 GMT   |   Update On 2024-02-16 01:34 GMT
  • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு.
  • டெல்லிக்கு செல்ல விடாமல் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 13-ந்தேதி (திங்கட்கிழமை) அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா மாநில அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.

பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்ட நடத்திய நிலையில் டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே இரண்டு முறை (பிப்ரவரி 8-ந்தேதி மற்றும் பிப்ரவரி 12-ந்தேதி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அரியானாவில் நடைபெற்றது. இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 18-ந்தேதி (நாளைமறுநாள்) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News