இந்தியா
மிசோரம் மாநிலத்தில் புயலால் பாதிப்பு

மேற்கு வங்காளத்தில் புயல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு- 50 பேர் காயமடைந்தனர்

Published On 2022-04-18 03:13 IST   |   Update On 2022-04-18 03:13:00 IST
மிசோரம் மாநிலத்தில் புயலுக்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள மோமாரி கிராம பஞ்சாயத்து பகுதியை புயல் தாக்கியது. 

சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்த நிலையில், இரண்டு பேர் உயிரிழந்தனர். குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக கூச் பெஹார் நகராட்சித் தலைவர் ரவீந்திர நாத் கோஷ் தெரிவித்துள்ளார். 

டூஃபங்கஞ்ச், மாதபங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளும் புயலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல் மிசோரம் மாநிலம் கோலாசிப் மற்றும் மமித் மாவட்டங்களில் புயல் தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக  தேவாலய கட்டிடம் உட்பட 200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அம்மாநில மந்திரி லால்ரின்லியானா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

அசாம் மாநிலத்தில் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக  இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.  இதனால் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்தன. 

ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் தரையில் சாய்ந்தன. புயலுக்கு டின்சுகியா, பக்சா, திப்ருகார் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Similar News