இந்தியா (National)
சுகேஷ் சந்திரசேகர்

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது அமலாக்கத்துறை

Published On 2022-04-05 04:57 GMT   |   Update On 2022-04-05 04:57 GMT
தொழில் அதிபரின் மனைவி உள்பட செல்வந்தர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

கடந்த 2017-ம் ஆண்டு முன்னான் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக டி.டி.வி.தினகரனிடமும் டெல்லி போலீசார் 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது உதவியாளர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில் அதிபரின் மனைவி உள்பட செல்வந்தர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தங்கள் காவலில் அமலாக்கத்துறையினர் தற்போது கொண்டு வந்துள்ளனர்.
Tags:    

Similar News