இந்தியா
மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் அரிந்தம் பக்‌ஷி

உக்ரைனில் இருந்து 63 விமானங்கள் மூலம் 13,300 இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசு

Published On 2022-03-05 13:57 GMT   |   Update On 2022-03-05 13:57 GMT
கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் சுமார் 2900 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் அரிந்தம் பக்‌ஷி கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து இதுவரை ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் சுமார் 2900 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் 13 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கார்கிவில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சுமியில் மோதல் தொடர்வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. சுமி நகரில் உள்ள இந்தியர்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்க இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தலைநகரில் முன்னேறும் ரஷிய படை... போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி பதிலடி கொடுத்த உக்ரைன்
Tags:    

Similar News