இந்தியா
பிரதமர் மோடி

தடுப்பூசிக்கு எதிராக பொய் பிரசாரம் செய்த காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் - பிரதமர் மோடி

Published On 2022-02-12 11:10 GMT   |   Update On 2022-02-12 11:10 GMT
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை அவமானப்படுத்திய காங்கிரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்கவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ருத்ராப்பூர்:

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தோம்.

ஏழைகளுக்கு பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேசன் பொருள் உள்ளிட்ட பல திட்டங்கள் வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், தங்களுக்கு கிடைத்திருக்காது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் வெறும் வயிற்றுடன் உறங்க நாங்கள் அனுமதித்தது இல்லை.

பெரிய சாலைகள், ரெயில், வான் போக்குவரத்து ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டன. மருத்துவ மற்றும் கலைக்கல்லூரிகளை கட்டிக் கொடுத்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்தது. தடுப்பூசி பணிகள் சரியாக நடந்தால், அரசிற்கு எதிராக எதுவும் பேச முடியாது என கருதி வதந்தி பரப்பியது.

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை காங்கிரஸ் அவமதித்தது. அக்கட்சிக்கு வரும் தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்தியாவை ஒரு நாடாக கருத கூட காங்கிரஸ் மறுக்கிறது. தேவபூமி உத்தரகாண்டின் புனிதத்தன்மையை பா.ஜ.க. பாதுகாக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News