இந்தியா
கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு

கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு

Published On 2022-02-10 11:52 IST   |   Update On 2022-02-10 12:38:00 IST
கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை தயாரிக்க வேண்டும் என்று மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கைத்தறி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே கூறிவந்தது.

இந்த நிலையில் மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி தற்போது பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் இனி கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என மாநில தொழிற்துறை மந்திரி ராஜீவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



கேரளாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு கைத்தறி ஆடை அணிந்து வரவேண்டும்.

இந்த நடைமுறையை எம்.எல்.ஏ.க்களும் பின்பற்றலாம். இதன்மூலம் கைத்தறி தயாரிப்பு மேம்படும்.

இதுபோல அரசு நிறுவனங்கள் ஏதாவது பொருள்கள் வாங்கும்போது, கைத்தறி தயாரிப்பு பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக கேரளாவில் மேலும் 75 புதிய கைத்தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். காக்கநாட்டில் சர்வதேச தரத்திலான கண்காட்சி மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

Similar News