இந்தியா
இந்தியாவில் காலாவதியான தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா?- மத்திய அரசு விளக்கம்
கேவேக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளின் சேமிப்பு ஆயுட்காலத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காலாவதியான தடுப்பூசிகளை மத்திய அரசு பொதுமக்களுக்கு செலுத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட் காலத்தை 9 முதல் 12 மாதங்கள் வரை நீட்டித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட் காலம் 6 முதல் 9 மாதமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது.
இதனால் காலாவதியான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை
இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.