இந்தியா
பிரதமர் மோடி

மீரட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் - பிரதமர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2022-01-02 00:28 GMT   |   Update On 2022-01-02 00:28 GMT
ஹாக்கி மைதானம் உள்பட நவீன விளையாட்டு உள் கட்டமைப்புகளுடன் இந்த பல்கலைக்கழகம் அமைகிறது.
மீரட்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெறுகிறது.  இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீரட் நகருக்கு வருகை தருகிறார், பிற்பகல் 1 மணியளவில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பது மற்றும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவை பிரதமரின் கவனம் செலுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

அதன்படி மீரட்டில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படும்.   செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து,  கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓட்டம் அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்டவை இங்கு அமைகின்றன.

பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு இருக்கும். 

540 விளையாட்டு வீராங்கனைகள் மற்றும்  540 விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டதாக இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் திகழும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News