செய்திகள்
அமரீந்தர் சிங்

தேர்தல் கமி‌ஷனில் புதிய கட்சி பெயரை பதிவு செய்ய அமரீந்தர் சிங் விண்ணப்பம்

Published On 2021-11-16 03:58 GMT   |   Update On 2021-11-16 03:58 GMT
பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரீந்தர் சிங்.

இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத்சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அமரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.

அவரது கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ ‌ஷரத்தின் படி பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்யுமாறு தேர்தல் கமி‌ஷனருக்கு விண்ணப்பம் வந்துள்ளது’ என்ற தகவல் கிடைத்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அமரீந்தர் சிங்கிற்கு தற்போது 79 வயதாகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை இவர் தீவிரமாக வளர்த்தார்.

ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து முதல்-மந்திரி பதவி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News