செய்திகள்
கைது

ஐதராபாத்தில் 1,240 கிலோ கஞ்சா பறிமுதல்-3 பேர் கைது

Published On 2021-11-16 02:56 GMT   |   Update On 2021-11-16 02:56 GMT
முக்கிய குற்றவாளி ஷேக் யாசீன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த ஒரு வருடமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்:

ஆந்திரா மாநிலத்தில் சமீப காலமாக கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 4 நாட்களுக்கு முன்னதாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை ஆந்திரா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம், ஐதராபாத் எல்லை அருகே உள்ள பொடுப்பால் பகுதியில் மும்பைக்கு கடத்த இருந்த சுமார் 1,240 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பக்வத் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் ஆந்திராவின் சில்லேரு பகுதியில் இருந்து ஐதராபாத் வழியாக மும்பைக்கு கடத்தப்பட இருந்தது. ரச்சகொண்டா போலீசார் எடுத்த துரித நடவடிக்கையால், 1,240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடன், இரண்டு கார், ஒரு சரக்கு வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.5,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கஞ்சா கடத்த முயன்றவர்களில் ஐதராபாத்தை சேர்ந்த டி.சந்தோஷ், வாசுதேவா ரெட்டி, பொண்ணம் ராஜேஷ்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஷேக் யாசீன் மற்றும் இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தலைமறைவான முக்கிய குற்றவாளி ஷேக் யாசீன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த ஒரு வருடமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News