செய்திகள்
பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- 14 மாவட்ட காங். நிர்வாகிகளுடன் பிரியங்கா உரையாடுகிறார்

Published On 2021-11-14 06:42 GMT   |   Update On 2021-11-14 06:42 GMT
பிரியங்காவின் வாக்குறுதிகள் உத்தரபிரதேச மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை ஓட்டாக மாற்றும் பணிக்காக அவர் உத்தரபிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை அமைத்துள்ளது. இதற்காக அங்கு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து தொடங்கி வைத்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா அங்கு முகாமிட்டு தீவிர களப்பணியாற்றி வருகிறார். இந்த முறை ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் நாள்தோறும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

பிரியங்காவின் வாக்குறுதிகள் உத்தரபிரதேச மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை ஓட்டாக மாற்றும் பணிக்காக அவர் உத்தரபிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி அவர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார்.

இந்தநிலையில் பிரியங்கா இன்றும், நாளையும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். புலந்தசரில் இன்று அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் ஆக்ரா, அலிகார், மீரட் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

பிரியங்கா இன்று புலந்தசரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். நாளை அவர் மொரதாபாத், சகரன்பூர், பரேலி உள்பட 18 மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறார். இந்த 2 நாள் கலந்துரையாடலில் அவர் கட்சியை பலப்படுத்துவது, வீதி வீதியாக மக்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.
Tags:    

Similar News